Wednesday, Oct 05th

Last updateFri, 29 Jul 2016 3pm

தமிழ் தந்த தலைவனுக்கு விழா

தமிழ் குமரன் என தமிழர்களால் வணங்கப்படும் கந்தனுக்கு தைப்பூசம் அன்று விழா எடுப்பது வழக்கமாகும்.

முருகு என அழகு என இளமையும் அழகும் பொருந்திய கார்த்திகேயன் என அழைக்கப்படும் அழகு முருகனுக்கு தைமாதம் வரும் பூச நட்சத்திரத்தில் அவனுக்கு திருவிழாக்கள் நிகழ்த்தி தேரிழுப்பர். தேவர் வாழ்வு சிறக்க அசுரருடன் சக்தி வேல் கொண்டு போரிட்டு அவர்களை வென்று தேவர் துயர் தீர்த்தவன் அந்த வடிவேலனுக்கு காவடி, பால்குடம் எடுத்து, முதுகில் செதில்குத்தி முள்ளுக்காவடியும் எடுப்பர். துலாக்காவடி, தூக்குக்காவடி, அழகு மயில் காவடி, பால்காவடி பன்னீர்காவடி, புஸ்பக்காவடி, சந்தனக்காவடி, பழக்காவடி இப்படி பல்வகை காவடிகளை தோளில் சுமந்து சென்று குமரனுக்கு காணிக்கை செலுத்துவர். சிலர் தமது தீராத நோய் தீர்ந்தது, கஸ்டம் குறைந்தது என நேர்த்திக்கடன் செலுத்த தலைமுடியைக்காணிக்கை ஆக்குவர். சிலர் கற்பூரச்சட்டி கைகளில் ஏந்தி வீதி வலம் வந்து கற்பூரம் ஏற்றுவர். அங்கப்பிரதட்சணம் செய்வர். அடி அடியாக விழுந்து வணங்கி அடிப்பிரதட்சணம் செய்வர். இப்படி சுப்பிரமண்யன் மேல் கொண்ட அதிக பக்தியால் எமக்கு எவ்வித குறைகளும் வராது காத்திடுவான் என்ற தமிழர்களின் பக்தி வைராக்கியத்திற்கு எடுத்துக் காட்டே இத்தைப்பூச விழாவாகும்.

மனிதமனங்களுக்கு ஒரு மருந்தாக குருவாக இதயத்தை இலேசாக்க வல்ல ஒரு சஞ்சீவி என்றால் அது சமய பக்தி நெறியே ஆகும். எவ்வளவு தூரம் நாம் வாழ்க்கை வளமாக்கப்போராடுகிறோம். அதை மிக தெளிவாக்குவது சமய நன்னெறிக்கொள்கைகளும், அதில் காட்டப்பட்டுள்ள வழிமுறைகளுமே எம்மை தெளிய வைக்கமுயற்சி செய்கிறது. எம்மை மூன்றுவித நிலைகளில் இறைவன் பார்க்கிறான். அதில் முதலாவது தான் வாழ பிறர் அழிய எண்ணுபவர்கள், இரண்டாவது தானும் வாழ பிறரும் வாழ எண்ணுபவர்கள், மூன்றாவது தான் அழிந்தாலும் பிறர் வாழ எண்ணுபவர்கள் இப்படி மூன்று நிலைகளில் இருக்கும் மனிதரை முறையே அதர்மர்கள், மத்யமர்கள், உத்தமர்கள் இவ்வாறு இனம் காணப்படுகின்றனர். இவர்களிடம் இறைவன் முதலில் வருவது இந்த உத்தமர்களைத் தேடியே ஆகும். ஏனெனில் பிறர் நலத்துக்காக வாழ்பவர்கள் உத்தமர்களே. அவர்கள் தம்மைப்பற்றி சிறிதும் கவலை கொள்ளாது அடுத்தவர் துன்பம் போக்குபவர்களாக இருக்கின்றனர். அப்படி எப்போது நாம் மாறுகிறோமோ அப்போதே எம் துயர் தீர்க்க அந்தகுமரன் ஓடோடி வந்துவிடுவான்.

அடுத்து இம்மானிடப்பிறவி எடுத்த நாம் அனைவரும் எமது ஐம்புலன்களையும் அடக்கிட பழகிக்கொள்ள வேண்டும். ஆறறிவு பெற்ற நாம் அடுத்தவர் கஸ்டம் நீக்கிட எம்மால் வேண்டியதை செய்யமுயற்சி செய்ய வேண்டும். அப்போது எமக்கு வேண்டியதை இறைவன் அளிக்க முன்னிற்பான். ஐம் புலன்களில் மிக முக்கிய உறுப்புகள் கண், வாய், செவி இவற்றால் நல்லவிடயங்களைப் பார்த்து, நல்ல விடங்களைப் பேசி, நல்ல விடயங்களையே கேட்டிட வேண்டும் நல்லதைப்பார்ப்பது இறைவழிபாடுகளில் பங்கு கொண்டு அவன் திவ்வியதரிசனம் காண்பது. அடுத்து நல்ல விசயங்களை இறைசந்நிதியில் பேசுதல், பஜனை பாடுதல், இறை நாமங்களை உச்சரிப்பது. அடுத்து நல்லதை கேட்பது இனிமையான மங்கள வாத்தியங்கள், மணியோசை, இறைநாமம், வேதமந்திரங்கள், ஆன்மீகச் சொற்பொழிவுகள், பக்தி கீதங்கள் பஜனைகள் இப்படி எல்லாவற்றையும் கேட்டு இன்புற்று பேரானந்தமடைய வழிவகுப்பது ஆலயங்களும் விழாக்களுமே ஆகும். தாய் வயிற்றில் இருந்து பக்குவமாக இம்மண்ணில் பிறந்தோம். பக்குவமாக வாழ்ந்து இறைவனின் பேரருள் பெற்றுய்ய வழிபாடு ஆற்ற வேண்டும்.

முருகன் தமிழ்த்தலைவன் கலியுகத் தெய்வம் எனபோற்றப்படுபவன். அவனை மீறிய செயல் என்று எதுவும் இல்லை. குன்றுகள் தோறும் குடி கொண்டு இருக்கும் குமரனை இத்தைப்பூசத் திருநாளில் வழிபடாதவர் எவரும் இல்லை. தமிழை மறவாது தமிழ்தந்த தலைவனை நினையாது எங்கும் செறிந்து வாழும் தமிழர் அவனுக்கு கோயில் எழுப்பாது உற்சவங்கள் செய்யாது இருந்ததில்லை. அவனருள் இருப்பதால் அன்றோ திரைகடலோடி திரவியம் தேடியதும் தமது செல்வம் செழிப்புறச் செய்த இறைவனுக்கு நன்றிசெலுத்தி ஆலயங்கள் அறநெறி மன்றங்கள், தமிழ்ப்பள்ளிகள் என்று தமிழையும் சமயத்தையும் வளர்த்தனர். அத்தோடு போற்றிக் காத்து எதிர்கால சந்ததிக்கு தமிழும் நன்நெறியும் மறவாது கற்றிட வழிவகுத்தனர். உலகம் எங்கும் வாழும் அனைத்து இந்துக்களும் இந்நன்னாளில் முருகனை நினையாது இருந்ததில்லை. மனிதனாக வாழ்பவன் புனிதனாக மாறி வாழ்வதன் அர்த்தம் புரிந்து அறநெறியில் நிற்கின்றனர். அதனால் தான் இன்பம் துன்பம் இரண்டையும் சமமாகப் பாவித்திடும் பக்குவம் மனிதரிடம் ஏற்படுகிறது. ஆக தைப்பூச நன்னாளில் திருக்குமரனுக்கு விழா எடுத்து உலகெங்கும் தமிழ் சிறக்க வழிபாடாற்றி பணிவோம்.

comments powered by Disqus