Wednesday, Oct 05th

Last updateFri, 29 Jul 2016 3pm

அன்பும் ஆதவனும்

அனைவருக்கும் புதிய ஆண்டு தைத்திருநாள் வாழ்த்துக்கள். தை என்றதும் எமக்கு நினைவில் வருவது தைப்பொங்கல், பட்டிப்பொங்கல் , கானும்பொங்கல், கன்னிப்பொங்கல் ஆகா இனிப்பான பொங்கலோ பொங்கல் என்று எல்லோரும் பொங்கிட தயராகிக் கொண்டு இருப்பார்கள்.

தை பிறந்தாச்சு இனி நமக்கு ஒரு வழி பிறந்து விடும், என அனைவரும் நம்பிக்கை கொண்டு வாழ்க்கைக் களத்தில் இறங்குவர். உழவன் கதிர் முற்றியது என நெல்வயற்களத்தில் இறங்கி நெற்கதிர்மணிகளை அறுவடை செய்து களத்துமேட்டில் குமித்து நெல்மணிகளை பிரிப்பான். பின் சாக்கு மூட்டைகளில் அள்ளி நிறைத்து, சணல் நூலால் ஊசி கொண்டு சாக்குப்பை சேர்த்து தைப்பான்.

பின்பு மாட்டு வண்டில்களில் ஏற்றி அடுக்கி வீடு கொண்டுவந்து வீட்டை நிறைப்பான். அவன் மனைவி உழத்தி நெல்லை எடுத்து உரலில் இட்டு குற்றி அரிசியாக்கி பின்பு சுளகில் எடுத்து உமி போக்கி நன்கு புடைத்து அதை சோறு சமைப்பதற்கு தயார் செய்து களம் அமைத்து விடுகிறார். இவ்வாறு கிராமங்களில் இன்றும் நடை பெற்று வருகின்ற வழக்கமாக இருக்கிறது. தற்காலத்தில் விவசாயம் மின்சாரவசதிகளும் இயந்திரங்களின் துணை கொண்டும் இப்போது நவீன மயமாக்கப் பட்டு விவசாயம் மிகவேகமாக வளர்ச்சி  அடைந்து வருகின்றது.

ஆனாலும் இயற்கை கொடுத்த சூரிய வெப்பமும், மழைநீரும் காற்றும் இல்லைஎன்றால் இப்பூமியில் உயிரினங்கள் போதிய உணவின்றி நீரின்றி, சுவாசமின்றி இல்லாது போயிருக்கும்.

ஆக உயிர் வாழ களம் அமைத்து ஒளி தந்து தாகம் தீர்த்து, சுவாசம் தந்து பசிபோக்கி அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்பவர் சூரியரே. அன்பும் ஆதரவும் எமக்கு அதிகமாகத் தருபவர்கள் சூரியரும் வருணனும், வாயுவும் ஆவார்.

இதில் மிக வேண்டத்தக்கவர் சூரியர் அவரைச் சுற்றி இப்பூமி உயிர்க்ளையும் சுமந்து கொண்டும் தன்னைத்தான் சுழன்று கொண்டும் இருக்கிறது. இவ்வுலகுக் வேண்டியதைத்ந்து கொண்டு அதிகாலையில் உதித்து எம் கண்முன் தோன்றி மாலையீல் மறைவது போன்று பிரம்மையையும் ஏற்படுத்தி சூரியன் எம்மை விழித்தெழ வைக்கிறார். இத்தெய்வத்திற்கு நாம் இனிப்பான பொங்கல் பொங்கி சூரியரை நினைந்து படைத்து வழிபட வேண்டும். எம்வாழ்வு பொங்கிட வேண்டும் இன்பங்களே என்றும் தொடர வேண்டும், நன்மைகள் பெருக வேண்டும் என்று மனமாரப் பிரார்த்திப்போம்.

இப்பொழுது முடியாத[ மாரி கழி] கழிந்தால் தை பிறப்பாள் தை தை என்று தைமகள் வந்து விடமுன் மார்கழி மாதமாகிய இம்மாதமே மாதவனுக்கு பிடித்தமான அதாவது ஶ்ரீ கிஸ்ணரின் மாதமாகும்.

இப்போது நடை பெற்றுக்கொண்டிருக்கின்ற இம்மாதத்துடன் தெட்சணாயணம் முடிந்து உத்தராயணம் தை பிறக்க தொடங்கி ஆறுமாதங்கள் தேவர்களுக்கு பகல் பொழுதாகும்.ஆடிமுதல் மார்கழி வரை தெட்சணாயணம் தேவர்களின் இரவு பொழுதாகும் ஆறு மாதம் முடிவடைந்து விடியல் பொழுது தேவர்களின் அதிகாலைப் பொழுதாகும் மார்கழி முழுவதும் சிவனை நினைந்தும் விஸ்ணுவை நினைந்தும் திருப்பள்ளி எழுச்சி பாடி விழிப்படையச்செய்வர். அத்தோடு திருவாதிரை நாள் வரை திருவெம்பாவை பாடி நடராஜரை வழிபாடாற்றுவர்.மார்கழிமாதம்முழுவதும் விஸ்ணுவை வழிபடுவதுடன் வைகுந்த ஏகாதசி திதி அன்று வைகுந்தத்தில் இறைவனை எழும்பு மாறு பாடி எம்முள் உறைந்திருக்கும் இறை சக்தியை எழுப்பி நல்ல எண்ணங்களை விதைத்திட மணிவாசகப்பெருமானும், ஆழ்வார்களும், சங்கீத சாஸ்திரிகளும் பாடி அருளினார்கள்.

இவ்வாறு ஆன்மிக உணர்வினை மக்களிடம் ஊட்டி நன் நெறியில் வாழ களம் அமைத்துக் கொடுத்தனர். கல்வி அறிவுபெற ஆரம்பப்பள்ளியில் தை பிறந்ததும் குழந்தைகளைச் சேர்த்து அறிவு புகட்ட ஆசிரியர் களம் அமைத்துக் கொடுப்பர். மனிதரின் வாழ்வு ஒரு நேர்த்தியான பாதையில் செல்லத்தொடங்க வேண்டும்.என்பதை தைஉணர்த்துகிறது. தை தை என குழந்தைகள் குதித்து விளையாடுவர்

அவர்களின் குழந்தைத்தனத்தையும், குறும்பையும் அடக்கி நல்லறிவு வித்தை விதைப்பர். பயிர் விதைத்து தையில் உணவுதானியத்தை பெருக்கி அறுவடை செய்து விதையை சேகரித்து வைப்பான் விவசாயி. தையலர் நூல் சேர்த்து கைக்தறியில் பின்னுவர். நெசவில் கைத்தறியில் பின்னிய துணி கொண்டு ஆடைகளை தைத்திடுவர்.. உணவு எவ்வளவு அவசியமோ தைத்த ஆடைகளும் ஒவ்வொருவரும் அணிய வேட்டி சேலைகளும் அவசியம் அதற்கு தையலாளர்களும்,நெசவாளர்களும் களம் அமைக்கின்றனர் அடுத்து உணவில் பால் குழந்தைகள் சிறுவர்கள் பெரியவர் என அனைவருக்கும் மிகவும் அவசியம் பால். இதை தருவது,பசு பசுக்கள் இல்லை என்றால் ஆரோக்கியம் தரும் பசும்பால் கிடையாது. ஆவினங்களை பால்களம் அதாவது பட்டிகள் தோறும் பண்ணைகள் தோறும் அமைத்து பால் தேவையை ப்பூர்த்தி செய்கின்றனர் கோவினங்கள் கோ என்றால் அரசனுக்கு சமமான பசுவினங்களுக்கு நன்றி செலுத்த பட்டிப் பொங்கல். பொங்கி பசுவுக்கு படைப்பர். வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும் நெல் உயர கோன் உயர்வான்,கோன் உயர குடி உயரும். உயர்வு பெற நாட்டின் குடிமக்கள் நற்களம் அமைப்பதை தையில் தொடங்க வேண்டும். இப்படி அன்பு செலுத்துகின்ற ஆதரவு தருகின்ற பண்பைப் புகட்டுகின்ற, ஆன்மீக பக்தியை ஊட்டுகின்ற உயிர்வாழ உணவும் ஊட்டமும் அளிக்கின்ற,அறிவைப்பெருக்கி நல்வழிகாட்டுகின்ற அறிஞர் பெருமக்கள் என அனைவரின் நலனுக்காகவும் தைத்திருநாளில் சூரியபகவானை மனம் உருகிப்பிரார்த்தனை செய்வோம்..இயற்கையை நேசிப்போம். உயர்வான மனித குலத்திடம் அன்பு காட்டுவோம்.

- 4தமிழ்மீடியாவுக்காக அருந்தா

 

comments powered by Disqus