Wednesday, Oct 05th

Last updateFri, 29 Jul 2016 3pm

ராஜபக்ஷக்களின் கைதுகள் உண்மையானவையா ? !

இலங்கை ஆட்சி அதிகார வரலாற்றில் ஊழல் மோசடிகளும், அதிகார துஷ்பிரயோகமும் புதிதான ஒன்றல்ல. அதுவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்கள் தொடர்பில் மக்களிடம் ஏற்பட்ட பெரும் அதிருப்திதான் ஆட்சி மாற்றமொன்றை நிகழ்த்திக் காட்டியது.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியாதிகாரம் முடிவுக்கு வந்து கிட்டத்தட்ட 18 மாதங்கள் கடந்துள்ள நிலையில், புதிதாக பதவியேற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடர்பிலான நிலைப்பாடுகளில் இழுபறிகளைக் காட்டி வருகின்றனர். குறிப்பாக, கடந்த ஆட்சியாளர்களின் மோசடிகள் தொடர்பிலான விசாரணைகளும், அதன்மூலமான தண்டனையும் காலம் தாழ்த்தப்பட்டு வருவதை காணக்கூடியதாக இருக்கின்றன.

ஊழல் மோசடிகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பிலான விசாரணைகள் சில நாட்களுக்குள் நிறைவுபெற்றுவிட முடியாது என்பது ஏற்றுக் கொள்ளப்படக்கூடியது என்கிற போதிலும், கடந்த அரசாங்கத்தின் அமைச்சர்களாக இருந்த பலர் மீதான விசாரணைகள் இடைநிறுத்தப்பட்டுள்ள விவகாரம் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டவர்களை அரசாங்கத்துக்குள் இணைத்து அமைச்சுப் பதவிகளை வழங்கியமை தொடர்பில் அதிருப்திகள் நீடித்து வரும் நிலையில், அவர்கள் தொடர்பிலான விசாரணைகளும் காணாமற்போய்க் கொண்டிருக்கின்றன.

இன்னொரு பக்கம், கட்சி அரசியல் என்கிற விடயத்துக்குள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் சிக்கிக் கொண்டுள்ளனர். குறிப்பாக, சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள் மீது அதீத அழுத்தங்களைப் பிரயோகிக்கும் விசாரணைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரசிக்கவில்லை. இதனால், பலர் மீதான விசாரணைகள் தடைப்பட்டுள்ளன. அதுபோல, ரணில் விக்ரமசிங்க சுதந்திரக் கட்சியை சூனிய வெளியொன்றுக்குள் சிக்க வைப்பதற்கான நிகழ்ச்சி நிரலில் போக்கில் ஊழல் மோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோக விசாரணைகளைக் கையாளும் நிலைகளினாலும் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன.

ஆயினும், ராஜபக்ஷக்கள் அவ்வப்போது கைதாவதும், பிணையில் விடுவிக்கப்படுவதுமான காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த மகனும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, இந்திய தனியார் நிறுவனமொன்றிடம் முறையற்ற ரீதியில் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டார் என்கிற குற்றச்சாட்டில் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டு எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னரும், முன்னாள் பொருளாதார அமைச்சரும், மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரருமான பஷில் ராஜபக்ஷவும் பல்வேறு குற்றச்சாட்டுக்களின் பெயரில் கைது செய்யப்பட்டதும், பின்னர் பிணையில் வெளிவந்ததும் அரங்கேறியது. அவர் மீதான விசாரணைகள் இன்னமும் தொடர்கின்றன. அத்தோடு, முன்னாள் ஜனாதிபதியின் இரண்டாவது மகனும், கடற்படை வீரருமான யோசித்த ராஜபக்ஷவும் முறையற்ற பணக் கையாள்கை தொடர்பில் கைதாகி பிணை பெற்று வெளியில் உலாவுகின்றார். மற்றொரு ராஜபக்ஷவான, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மீதும் ஊழல் மோசடி விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ராஜபக்ஷக்கள் மீதான விசாரணைகள் உண்மையாக கையாளப்படுகின்றனவா அல்லது அரசியல் நோக்கங்களை அடைவதற்காக கையாளப்படுகின்றனவா என்கிற கேள்வி மக்களிடம் எழுந்திருக்கின்றது. ஏனெனில், ராஜபக்ஷக்கள் மீதான கொலைக் குற்றச்சாட்டுக்கள் உள்ளிட்ட பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகள் காலம் தாழ்த்தப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட வேண்டியது. தான் கைது செய்யப்படுவதை நாமல் ராஜபக்ஷவு தன்னுடைய பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்யும் அளவுக்கா விடயங்கள் கையாளப்படுகின்ற என்கிற கேள்வியும் எழுகின்றது.

இந்த இடத்தில் இன்னொரு விடயத்தினையும் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கின்றது. அதாவது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் அவர்களோடு இணைந்து கூட்டுக் குற்றங்களைப் புரிந்தவர்களை முழுமையாக காப்பாற்றிவிட்டு ராஜபக்ஷக்கள் மீதான விசாரணைகளை முன்னெடுப்பது என்பது உண்மையான குற்றங்களை வெளிக்கொணர்வதிலிருந்து பாரிய விலக்கினை அளிக்கும். அது, ராஜபக்ஷக்களுக்கு சாதகமான நிலைகளையே ஏற்படுத்தும்.  அப்போது, கடந்த காலத்தில் ஊழல் மோசடிகளிலும், அதிகார துஷ்பிரயோகங்களிலும் ஈடுபட்டவர்கள் எந்தவித தண்டனைகளுமின்றி தப்பித்துக் கொள்வார்கள்.

 

comments powered by Disqus