Wednesday, Oct 05th

Last updateFri, 29 Jul 2016 3pm

பள்ளி செல்லும் வழியில்..

2013 ஆகஸ்ட் லோகார்னோ சர்வதேசத் திரைப்பட விழாவில்,  பியாற்சா கிரான்டே பெருமுற்றப் பெருந்திரையில்,  முதற் காட்சியாகத் திரையிடப்பட்ட Sur le chemin de l'école   ( பள்ளி செல்லும் வழியில் ) காட்சி முடிந்ததும்,  விக்கித்துப் போய் நின்றது பியாற்சா கிரான்டே பெருமுற்றம்.  மானுடத்தின் மான்பு  தெரிந்தவர்கள் தொண்டைக்குளியை இனம் புரியாச் சோகம் அடைத்துக் கொண்டது. 

77 நிமிடங்கள் திரையில் ஓடிய காட்சிகளின் நாயகர்கள் 11 வயது முதல் 13 வயது வரையிலான பள்ளி மாணவர்கள். தினம் தோறும் பாடசாலைக்குச் செல்லும் அவர்களது பயணம்தான் இக் காட்சிப்படத்தின் கதை.

இவ்வுலகில் உண்ணும் உணவிற்கும், பருகும் நீரிற்கும், உறங்க இடத்திற்கும், கற்றலுக்கான கல்விக்கும், எத்தனைவீதமான மக்கள் சிரமப்படுகின்றார்கள் என அறியாமலே வாழ்க்கையைக் கடந்து சென்று விடுகின்றோம்

வசதி வாய்ப்புக்களும் வாழ்க்கைத் தரமும் நிறைந்த மக்கள், தங்கள் வாழ்வின் சுவாரசியத்திற்காக, பொழுது போக்கிற்காக,  சகல பாதுகாப்புக்களுடனும் சாகசப்பயணங்கள்  (adventure trips ) மேற்கொள்வார்கள்.  ஆனால் அடிப்படை வசதிகளற்ற மக்களது வாழ்வின் எல்லா நாட்களும், எல்லாக் கணங்களும் சாகசங்கள் நிறைந்தவைதான்.  அவ்வாறான சாகசப் பயணங்களை மேற்கொண்டு பயணிக்கின்றார்கள் இப் படத்தின் நாயகர்கள் தங்கள் கல்விக்காக...

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இதே பூவுலகின் பல பாகங்களிலும்,  இளஞ்சிறார்களின் கல்விக்கான பயணம் எவ்வளவு கடினமானதாக இருக்கிறது என்பதை, நிஜமான நாயகர்களையும், காட்சிகளையும் வைத்து, அழகியலோடு ஆவணப்படுத்தியிருக்கின்றார் பிரான்சின் ஆவணப்பட இயக்குனரான (Pascal Plisson ) பாஸ்கால் பிளிச்சோன்.

மொரோக்கோவின் அட்லான் மலைத்தொடரின் கடினமான சரிவுகளில் நாள்முழுவதும் பயணிக்கின்றாள் 11 வயதான சகிரா.  அதே வயதான ஜக்சன்,  கென்யாவின் காட்டுவெளிகளில்,  கடும் வெயிலையும், வனவிலங்குகளையும் தாண்டி, தன் கல்விக்காகத் தினந்தோறும் பயணிப்பது 15 கிலோ மீட்டர்கள்.  ஆர்ஜென்டினாவின் பத்தகோனியா வெளி தாண்டி, பள்ளிக்குச் செல்ல கர்லித்தோ குதிரை மேல் பயணிப்பது 18 கிலோ மீட்டர்கள்.  நடக்க முடியாத 13 வயது இந்திய மாணவன் சாமுவேலை, அவனது உடைந்த சக்கரநாற்காலியோடு மணல் நிலத்தில் இழுத்துச் செல்வது அவனது சகோதரர்கள்.

தினந்தோறும் சவாலானதும், சாகசங்கள் நிறைந்ததுமான அவர்களது பயணம் கல்விக்கானது. இவர்கள் மட்டுமல்ல இன்னும் எண்ணற்ற சிறார்களின் கல்வித்தேவை இன்றளவும்  நிறைவேறவில்லை.  வளங்களுக்குள் வாழும் மனிதர்களுக்கு இந்த உண்மை இன்னமும் புரிவதில்லை.  அதனைப் பிரசார நெடியற்ற பேசுபொருளாக,  அழகியல் மிக்க ஆவணமாகத் தொகுத்துள்ளார் இயக்குனர் பாஸ்க்கால்.

இந்த விவரணப் படத்தினைப் பற்றி இப்போது எழுதுவதற்கான  காரணம்;  யூடிப்பில் இவ் விவரணத்தைத் தற்போது பார்க்க முடிகிறது.  இதனை வாசிக்கும் நீங்கள் மாணவராயினும், பெற்றோராயினும் ஒருமுறை முழுமையாகப் பார்த்துவிடுங்கள். பார்த்த பின் உணர்வீர்கள் நாம் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்பதனை....

இவ்வாண்டு (2016) ஆகஸ்ட் 03  முதல் ஆரம்பமாகிறது 69 லோகார்ணோ சர்வதேச திரைப்பட விழா.  இத் திரைப்படவிழாவில் இம்முறை
Open Doors cinema  எனும் பகுப்பில் ஆசிய நாடுகளின் படங்கள் திரையிடப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அவ்வாறு திரைகாணவிருக்கும் படங்களும் படைப்பாளிகளும்;- Cinema, City and Cats di Ishtiaque Zico, Bangladesh
- Craving (Ta Ku Tha Lo Chin Thee) di Maung Okkar, Myanmar
- Day After Tomorrow di Kamar Ahmad Simon, Bangladesh
- House of My Fathers di Suba Sivamukaran, Sri Lanka
- Season of Dragonflies (Jhyalincha) di Abinash Bikram Shah, Nepal
- The Cineaste di Aboozar Amini, Afghanistan
- The Red Phallus di Tashi Gyeltshen, Bhutan
- Then They Would be Gone (Mela Chaar Dinan Da) di Maheen Zia, Pakistan

இறுதிநாளான ஆகஸ்ட் 13ல்  பியாற்சா கிரான்டே பெருமுற்றத்தில்  திரையிடப்படுகிறது,  விருதுகள் பல பெற்ற இந்தியத் திரைப்படமான ' லகான்'  இயக்குனரின் மொகஞ்சதாரோ.

- 4தமிழ்மீடியாவிற்காக : மலைநாடான்


 

comments powered by Disqus