Wednesday, Oct 05th

Last updateFri, 29 Jul 2016 3pm

ஏறுதழுவல் : தடையை உடைத்தெறியத் துடிக்கும் இசை!

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் யூடியூப்பில் வெளியான ஹிப்ஹாப் தமிழாவின் «தக்கரு தக்கரு» வீடியோ பாடலை தற்செயலாக நேற்றுப் பார்த்தேன். அது எனக்குள் பெரும் கவனத்தை ஈர்த்திருந்தது.

 திரை இசைக்குள் காலடி எடுத்து வைத்த போதும், ஹிப்ஹாப் தமிழாவின் இசை வீடியோ ஆல்பங்களுக்கு தனிக் கிராக்கி இருப்பதும், அதில் அவருடைய ஸ்கிரீன்பிளே, இயக்கம் முழு வீச்சுடன் புதுமையாக வெளிவருவதையும் அவதானிக்கலாம். அதோடு எப்படியும் அந்த இசையில் சமுதாயச் சிந்தனையுடன் சார்ந்த கருத்து இருப்பதாலும் அது பெரும்பாலோனோருக்கு பிடித்துப் போய்விடுகிறது.

அப்படி அண்மையில் அவர் எடுத்துக்கொண்ட சமுதாயச் சிந்தனை, தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுக்களில் ஒன்றான ஏறுதழுவல் (ஜல்லிக்கட்டு அல்லது மாடுபிடித்தல்) பற்றிய விமர்சனத்துடனானது.

«ஏறுதழுவல்» தொன்று தொட்டு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுக்களில் ஒன்றாக திகழ்கிறது. விலங்கு உரிமை கரிசணை, மனித உயிர்க் கரிசணை என்பவற்றை காரணம் காட்டி இவ்விளையாட்டைத் தடை செய்தால், இதற்கென்றே வீர மரபணு வளர்ச்சியுடன் பிறப்புறும் தனித்துவமான காளை இனங்கள் அழிந்து போகும் என்பது ஹிப்ஹாப் தமிழா உட்பட இவ்விளையாட்டை ஆதரிப்போரின் அடிப்படையான வாதம். அதோடு இவ்விளையாட்டுக்காக பயன்படுத்தும் காளை இனங்கள் உண்மையில் துஷ்பிரயோகப்படுத்தப்படுகின்றனவா, துன்புறுத்தப்படுகின்றனவா, போதையேற்றப்படுகின்றனவா இக்கிராமங்களுக்கு வந்து நேரடியாக களத்தில் பாருங்கள்.

காற்பந்து பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமெனில், அவ் விளையாட்டை தெரிந்தவர்களிடம் கேட்கிறீர்கள், கிரிக்கெட் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமெனில், அவ்விளையாட்டை தெரிந்தவர்களிடம் கேட்கிறீர்கள், ஏன் ஏறுதழுவுதல் விளையாட்டைப் பற்றி மட்டும் முழுமையாக தெரிந்துகொள்ளாமல், அதை தடை செய்யவேண்டும் என்ற சிந்தனையில் உங்களை ஈடுபடுத்திக் கொள்கிறீர்கள் எனக் கேள்வி எழுப்புகிறார் ஹிப் ஹாப் தமிழா.

அதோடு, இப்பாடலிலேயே, எப்படி அக்காளை இனங்கள் வளர்க்கப்படுகின்றன, அதன் உரிமையாளர்களுக்கும், அந்த காளை இனங்களுக்கும் உள்ள உறவு என்ன, அவை இறந்தாலும் அவற்றிற்கு வழங்கப்படும் மரியாதை என்ன என பல கோணங்களில் வீடியோ காட்சி நீள்வதும், அதற்கான சரியான இசைக் கோப்பும், காட்சி வெட்டும் பாடலிலும், அதற்கான கருத்திலும் நம்மை கட்டிப் போட்டுவிடுகிறது.

ஏறுதழுவல் விளையாட்டை எதிர்க்கும் பெடா, புளூ கிராஸ் போன்ற விலங்கு நல அமைப்புக்கள் முன்வைக்கும் வாதம், இவ்விளையாட்டுக்காக பயன்படுத்தப்படும் காளை இனங்கள் துன்புறுத்தப்படுகின்றன. அதோடு தேவையற்ற மனித உயிரிழப்புக்களும், காயங்களும் ஏற்படுகின்றன.

ஏறுதழுல் விளையாட்டுக்காக மட்டுமே இக்காளை இனங்கள் மிகுந்த அக்கறையுடனும், பாசத்துடனும் வளர்த்தெடுக்கப்படுகின்றன என்பதற்காக அந்த ஒருநாளில் அவற்றிற்கு உளச் சித்திரவதையும், உடல் சித்திரவதையும் கொடுப்பதை அனுமதிக்கலாம் என்பது ஏற்புடையதல்ல. அதோடு இக்காளைகளை அடக்க முற்படுபவர்கள் முறையான பயிற்சிகளையோ அதற்காக உடல் உள ஆரோக்கியத்தையோ கவனத்தில் கொள்வதில் அலட்சியம் நிலவுகிறது. இதனால் வருடாவருடம் தேவையற்ற உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன என்பனவாகும்.

ஆனால் ஏறுதழுவலை தடைசெய்தால் அது மேற்குகல பன்னாட்டு வணிக நிறுவனங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாகிவிடும் எனும் வாதமும் இங்கு குறிப்பிடத்தக்கது.

வளரும் நாடுகளின் விவசாயத்தில் விதை உற்பத்தி, விதை விற்பனையைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர எப்படி மேற்குலக பன்னாட்டு நிறுவனங்கள் முயற்சிக்கின்றனவோ, அதே போன்று வெளிநாட்டு மாட்டினங்களையும், உள்ளூர் விவசாயத் சந்தையில் புகுத்துவதற்கு, இவ்விளையாட்டு தடையாக இருக்கலாம் என்கிறது அவ்வாதம்.

இயற்கையான இனச் சேர்க்கை மூலம் மரபணு வளம் மிகுந்த உள்நாட்டு மாட்டினங்கள் பெருகுவதறு இவ்வீரவிளையாட்டு தொடர்ந்து நடத்தப்படுவது அவசியம்.

இப்படி வாதிப் பிரதி வாதங்கள் ஒரு புறமிருக்க நேற்று இவ்வீடியோவை பார்த்துவிட்டு, வெளியில் என் நண்பனைச் சந்தித்த போது, அவனுடன் இது பற்றி உரையாடிக் கொண்டிருந்தேன்.

«ஸ்பெயின் போன்ற மேற்குலக நாடுகளில் Bullfighting விளையாட்டு மிகப் புகழ்வாய்ந்த, வருமானத்துக்குரிய விளையாட்டாகவும், சுற்றுலாக் கவர்ச்சி விளையாட்டாகவும் திகழ்கிறது. அதற்கான எதிர்ப்பு இந்தளவு வலுப்பெறவில்லையே. அவ்வளவு வேண்டாம். ஏறுதழுவலை எதிர்ப்பவர்கள் எல்லாம் முதலில் வெஜிட்டேரியன்களாக மாறுங்கள். உங்களது உணவுக்காக அவை படைக்கப்படவில்லை" என்கிறான் என் நண்பன். 

ஒரு விளையாட்டின் பாதுகாப்பு குறைபாடுகளை நீக்கி அதை நெறிப்படுத்துவதற்கும், அவ்விளையாட்டையே முற்றாகத் தடை செய்யக் கோருவதற்கும் இடையில் பலரது சுயலாபங்கள் இருக்கிறது என்பது மட்டும் எனக்கு இப்போதைக்கு புரிந்திருக்கிறது. 

 - 4தமிழ்மீடியாவுக்காக ஸாரா  

 

comments powered by Disqus