Wednesday, Oct 05th

Last updateFri, 29 Jul 2016 3pm

துருக்கியில் நடைபெறுவது என்ன? : இராணுவச் சதிப் புரட்சியின் பின்னணியும், காரணிகளும்!

துருக்கியின் ஜனாதிபதி எர்டோகன்

நேற்று ஜூலை 16ம் திகதி, துருக்கியின் அரசைக் கவிழ்க்க மேற்கொள்ளப்பட்ட இராணுவச் சதி புரட்சி முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ள நிலையில், இதுவரை கிட்டத்தட்ட 3,000 க்கு மேற்பட்ட இராணுவ வீரர்கள் கைதாகியுள்ளனர். 2,750 க்கு மேற்பட்ட மதச்சார்பற்ற நீதவான்கள் கைதாகியுள்ளனர்.

 சுமார் 13 மணித்தியாலங்களுக்கு மேலாக இடம்பெற்ற மோதல்களில் சுமார் 265 பேர் கொல்லப்பட்டனர். இதில் 17 அரச சார்பான காவல்துறையினரை தவிர்த்துப் பார்த்தால் பொதுமக்களும், இராணுவ சதி முயற்சியில் ஈடுபட்ட கிளர்ச்சி இராணுவ வீரர்களுமே கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலனவர்கள்.

ரேகேப் எர்டோகனின் 14 வருடத்திற்கு மேலான சர்வாதிகார ஆட்சி மற்றும் தீவிர மதவாத போக்கை எதிர்த்தும் மறுபடியும் துருக்கியில், நீதியையும், மனித உரிமைகளையும் நிலைநிறுத்தவுமே இந்த இராணுவச் சதிப் புரட்சியில் களமிறங்கியதாக அதை வழிநடத்திய இராணுவப் பிரிவினர் கூறியுள்ளனர்.

இராணுவச் சதிப்புரட்சியில் ஈடுபட்ட முக்கியஸ்தர்களில் சிலர் கிரேக்க நாட்டிற்கு இராணுவ ஹெலிகாப்டரில் சென்று அகதி அந்தது கோரியுள்ளனர். அவர்களை நாடுகடத்துமாறு கிரீஸ் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார் எர்டோகன். அதே போன்று இச்சதிப் புரட்சிக்கு இன்னுமொரு முக்கிய மூளையாக செயற்பட்டவர் என ஃபெதுல்லாஹ் குலென் எனும் இஸ்லாமிய மதகுரு மீது குற்றம் சாட்டியுள்ளார் எர்டோகன்.

தற்சமயம் அமெரிக்காவில் அகதி அந்தஸ்து பெற்று வாழ்ந்து வரும் ஃபெதுல்லாஹ் குலெனை அங்கிருந்து நாடுகடத்துமாறும் துருக்கி அரசு கோரியுள்ளது. அல்லது இந்த இராணுவச் சதிப் புரட்சிக்கு பின்புலமாக செயற்படுவதாக அமெரிக்கா மீதும் சந்தேகிக்க வேண்டி வரும் என பயமுறுத்தல் எழுகிறது.

எர்டோகனுக்கு ஆதரகாள தலைநகரில் குவிந்த மக்கள் கூட்டம்

இராணுவப் புரட்சி முயற்சி நடைபெற்றுக் கொண்டிருந்த போது, துருக்கியின் தலைநகர் அங்காராவிலிருந்து இஸ்தான்புல்லுக்கு நள்ளிரவில் தப்பியோடிய எர்டோகன், அங்கிருந்து கைத் தொலைபேசி வீடியோ மூலம் தனது ஆதரவாளர்களுக்கு அவர வேண்டுகோள் ஒன்றை விடுத்தார். அதன் படி பெரும்பாலான மக்கள் வீதியில் களமிறங்கி எர்டோகனுக்கு ஆதரவாக குரல்கொடுக்கத் தொடங்கியிருக்காவிடின் இந்த இராணுவப் புரட்சி சில சமயம் வெற்றி பெற்றிருக்கலாம்.

ஆனால் முறையான திட்டமிடல் இல்லாததும், ஆள்பலம் இல்லாததும், முறையாக ஒழுங்கமைக்கப்படாததும் இந்த இராணுவப் புரட்சி தோல்வியில் முடிந்ததில் செல்வாக்கு செலுத்தியிருக்கிறது.

இராணுவப் புரட்சி முயற்சியில் ஈடுபட்டதாக கைதாகும் ஒரு இராணுவ அதிகாரி

துருக்கியில் இதுவரை நான்குமுறை இராணுவச் சதிப் புரட்சி முயற்சி நடைபெற்றிருக்கிறது. அதில் இரண்டு வெற்றி பெற்றிருக்கிறது. இறுதியாக 1997ம் ஆண்டு இடம்பெற்ற இராணுவச் சதிப் புரட்சியின் முடிவில் அப்போதைய இஸ்லாமிய பிரதமர் நெக்மெத்தின் எர்பாகன் பதவி விலகியிருந்தார்.

எனினும் இம்முறை இடம்பெற்ற இராணுவச் சதிப் புரட்சி முயற்சிக்கு பல காரணங்கள் உண்டு.  எர்டோகனின் அரசியல் கொள்கைகளில் ஏற்கனவே பல துருக்கி இராணுவ உயர் அதிகாரிகள் அதிருப்தி அடைந்திருந்தனர்.

இதனால் துருக்கி அரசியலில் இராணுவத்தின் செல்வாக்கையும், இராணுவ இருப்பையும் கட்டுப்படுத்துவதில் எர்டோகனும் முனைப்புக் காட்டிவந்தார். துருக்கியின் இராணுவத் தலைமை அதிகாரியாக இருந்த ஜெனரல் யாஸர் புயுக்கானித், 2007 இல் துருக்கியின் பிரதமராக அப்துல்லா குல் நியமிக்கப்படுவதை கடுமையாக எதிர்த்திருந்தார்.

 அப்துல்லா குல், துருக்கியின் AKP கட்சியின் நிறுவனரும், எர்டோகனின் நெருங்கிய நண்பரும் ஆவார். இதனால் இராணுவ தரப்புக் கருத்தை பொருட்படுத்தாது அப்துல்லா குல்லை பிரதமராக நியமித்தது துருக்கி அரசு.

இக்காலப்பகுதியிலேயே எர்கெனேகொன் (Ergenekon) எனும் துருக்கியின் தீவிரவாத பச்சை குத்தப்பட்ட கிளர்ச்சிக் குழு மீதான குற்றச்சாட்டு விசாரணை தொடங்கியது. இக்குழுவினர் மதச்சார்பற்ற தேசியவாதிகளாக தம்மை அடையாளப்படுத்தி வருபவர்கள்.

இந்நிலையில் தொடர்ந்து துருக்கியின் பல இராணுவ உயர் அதிகாரிகளும், இராணுவ வீரர்களும், துருக்கி அரசுக்கு எதிராக சதிசெய்கின்றனர் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்படுவதும், விடுவிக்கப்படுவதுவாக பதற்றம் தொடர்ந்து வந்திருந்தது.

இந்நிலையில், ஃபெதுல்லா குலென் எனும் துருக்கியின் இஸ்லாமிய மதகுரு 1999ம் ஆண்டு அமெரிக்காவின் பென்சில்வேனியாவுக்கு தப்பியோடி அரசியல் தஞ்சம் கோரியிருந்தார். இராணுவத்திலும், புலனாய்வுத் துறையிலும், நீதி, காவல் துறையிலும் இருக்கும் அவரது ஆதரவாளர்கள் தன்னிச்சையாக முடிவெடுத்து இந்தப் புதிய இராணுவப் புரட்சி முயற்சியை மேற்கொண்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

எனினும் இதுநாள் வரை எர்டோகனின் அரசாட்சியின் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களும் கொஞ்சமல்ல. பொது மக்களை தீவிர மதவாத சிந்தனைகளுக்குள் பின் தள்ளி வருவதாக அவர் மீதான குற்றச் சாட்டுக்கள் உண்டு. அதோடு ஊழல், சொத்துக் குவிப்பு குறித்தும் கடும் விமர்சனம் உண்டு.

உலகின் மிகப்பெரிய, செல்வந்த வாசஸ்தலம் அவருடையது. சுமார் 400 மில்லியன் யூரோ பெறுமதியான மாடமாளிகை. அதோடு துருக்கியின் ஊடாக ஐரோப்பாவுக்கு நுழையும் அகதிகள் மீதான பாரபட்சம், சிரிய யுத்தத்தில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாகவும், அரசுக்கு ஆதரவாகவும் ஒரே நேரத்தில் இருபுறமும் தாவும் சுயலாப போக்கு என்பனவும் அவர் மீதான குற்றச்சாட்டுக்கள்.

இந்நிலையிலேயே இந்த இராணுவப் புரட்சி முயற்சி நடைபெற்று தோல்வியில் முடிந்திருக்கிறது. எர்டோகனுக்கு எதிரான கருத்துடையவர்கள் எவரையும் சல்லடைபோட்டுத் தூக்கி முடிப்பதற்கு இந்த ஒரு தருணம் போதும் என்பதற்கு எர்டோகன் கூறியுள்ள இந்த ஒரு வாக்கியம் நல்ல சான்று.
«இராணுவச் சதிப் புரட்சி முயற்சி, கடவுள் எனக்கு கொடுத்த ஒரு பரிசு»

- 4தமிழ்மீடியாவுக்காக ஸாரா

comments powered by Disqus