Wednesday, Oct 05th

Last updateFri, 29 Jul 2016 3pm

கபாலி - விமர்சனம்

தேங்கிய மழை நீரில் திமிங்கலம் ஒதுங்கிய மாதிரி, இந்தப்படத்தில் ஒதுங்கியிருக்கிறார் ரஜினி! சூப்பர் ஸ்டார் ரஜினி!!

துபாயில் துப்பட்டா வித்தா நமக்கென்ன? பல்கேரியாவில் பாயாசம் கொதிச்சா நமக்கென்ன? தென் கொரியாவில் தேங்காய் ஒடைஞ்சா நமக்கென்ன? என்கிற மனநிலை படம் பார்க்கிற பத்தாவது நிமிஷத்தில் நமக்கு வந்துவிடுகிறது. காரணம்... மலேசியா தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கும், மலாய் முதலாளிகளுக்கும் இடையே நடக்கிற கூலி மற்றும் கொடுக்கல் வாங்கல் பஞ்சாயத்துதான் கதை.

தமிழனுக்கு சம்பள உயர்வு பெற்றுத்தரும் ரஜினியை, அங்கிருக்கும் தமிழர் தலைவரான நாசர் உசுப்பேற்றிவிடுகிறார். கொஞ்ச நாளிலேயே தலைவர் நாசருக்கு உடன் இருப்பவர்களே கொள்ளி வைக்க, நாசரின் காலியான இடத்தில் உட்காருகிறார் ரஜினி. ஆங்... அந்த ஓப்பனிங் சீன் பிரம்மாதம். சிறைக்குள்ளிருந்து 20 வருஷங்கள் கழித்து வெளியே வரும் ரஜினி, மாறிப்போன மலேசியாவை பிரமிப்போடு பார்க்கிற காட்சி. அந்த வெண்தாடியும், அந்த தாடிக்குள்ளிருந்து அவர் கொடுக்கும் எக்ஸ்பிரஷன்களும், அந்த அலட்சிய சிரிப்பும், எவ்வளவு பாடாவதி கதையையும் இட்டு நிரப்புகிற பேரழகு!

நிறைமாத கர்ப்பிணியாய் தன் மனைவி ராதிகா ஆப்தேவை பறிகொடுத்துவிட்டு சிறைக்குப் போகும் ரஜினி, அவள் சாகவில்லை. உயிரோடுதான் இருக்கிறாள் என்று தெரிந்தால் என்னாவார்? ஆகிறார்...! உயிரோடு இருக்கிற மகளையும் கூட்டிக் கொண்டு ராதிகாவை தேடிச் செல்லும் அவர், தொலைந்தவை கிடைத்த பின்பும், கிடைத்ததை கொண்டு சுகமாய் இருக்க முடிகிறதா? கவித்துவமான முடிவு. ஆனால் கலங்கலான பிரசன்ட்டேஷனுடன்! “ஏம்ப்பா... அவன் ரஜினியை சுட்ருப்பான்ற?” “இல்லப்பா... அவனைதான் அவரு சுட்ருப்பாரு...” இப்படி முணுமுணுப்போடு கலைகிறது ரசிகர் கூட்டம்!

இதே ரஜினி படத்தில்தான் ஒரு நீலாம்பரி அழியாப்புகழ் பெற்றார். இதே ரஜினி படத்தில்தான் ஒரு ஆன்ட்டனிக்கு அழியாப் புகழ் கிடைத்தது. இப்படி இதே ரஜினி படத்தில்தான்... என்று உதாரணம் காட்டிக் கொண்டேயிருக்க முடியும். இந்தப்படத்தில், ரஜினி என்கிற ஒரு நபர் ராணுவம் போதும் என்று நினைத்துவிட்டார் பா.ரஞ்சித். அவரைத்தவிர, ரஜினிக்கு டஃப் கொடுக்கிற ஒரு லுச்சா பச்சாவும் இல்லை என்பதுதான் இந்த படத்தின் ஆகப்பெரிய ஆழ்துளை பஞ்சர்!

நல்லவேளை... படம் முழுக்க வருகிறார் ரஜினி. நின்றால், நடந்தால், சிரித்தால், முறைத்தால், ஏன் மூச்சு விட்டால் கூட அவரை முழுசாக ரசிக்க முடிகிறது. அதிலும் படத்தில் வருகிற அந்த முதல் பைட், இத்தனை வயதில் இப்படியொரு கரண்ட்டா? என்று பிரமிக்க வைக்கிறார் ரஜினி.

‘நாயகன்’ படத்தில் ஒரு நாயக்கரே... என்றால், இந்தப் படத்தில் ஒரு ஜான் விஜய். ரஜினி ஊரிலில்லாத போது அவரையும் போட்டுத்தள்ளுகிறார்கள். முகமெல்லாம் பேண்டேஜ் கட்டுகள் சகிதம் அவர் கொடுக்கும் எக்ஸ்பிரஷன், அவருக்குள்ளிருக்கும் நடிகனையும் வெளிப்படுத்துகிறது. படத்தில் கலையரசன், தினேஷ், ரித்விகா, மைம் கோபி  என்று பல ‘தெரிந்த’ முகங்கள். (நமக்கில்லைப்பா. பா.ரஞ்சித்துக்கு) கலையரசனுக்கு ஸ்கோர் இல்லாவிட்டாலும், தினேஷுக்கு நிறைய மார்க் கொடுக்கலாம். அதுவும் அவரை போட்டு நையப்புடைக்கிற அந்த பைட் சீனில், மனுஷன் அற்புதமாக நடித்திருக்கிறார்.

கபாலி மட்டும் வரட்டும். தன்ஷிகாதான் பேசப்படுவார் என்று பில்டப் கொடுத்தவர்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது. அவரும் பேசவில்லை. அவர் கேரக்டரும் பேசப்படவில்லை.

ராதிகா ஆப்தே கேரக்டருக்கு நம்ம ஊரு தேவயானி போதும். எதற்காக அவ்வளவு பெரிய பில்? இருந்தாலும், ரஜினியும் ராதிகாவும் சந்தித்துக் கொள்கிற அந்த காட்சி, நம்மையறியாமல் மனமுருக வைக்கிறது. திரிசூலத்தில் பல வருஷங்கள் கழித்து சிவாஜியும், கே.ஆர்.விஜயாவும் போனில் பேசிக் கொள்வார்களே... அப்படி! “உன் கருப்புக் கலரை அப்படியே எடுத்து என் உடம்பு முழுக்க பூசிக்கணும்” என்கிற வசனம் பேசும்போது மட்டும் ராதிகாவின் கண்ணும், அதற்குள் ஒளிந்திருக்கிற வெட்கமும் அழகோ அழகு.

கேங் லீடராக வரும் கிஷோருக்கு பெரிய வேலையில்லை. ஆனால் ரஜினியுடன் முதல் பைட்டில் மோதும் அந்த இளைஞர் கவனிக்க வைக்கிறார்.

பின்னணி இசையில் பிரமாதப்படுத்தியிருக்கிறார் சந்தோஷ் நாராயணன். பாடல்களில் ‘நெருப்புடா’ மட்டும் உயிர். ஜீவன். எல்லாம்! மற்றவை ‘வெறுப்புடா!’ ஜி.முரளியின் ஒளிப்பதிவு பிரமாதம். பிளாஷ்பேக்கில் வரும் இளைஞர் ரஜினிக்கு இவர் கொடுத்திருக்கும் டோன் மற்றும் லைட்டுங்குகள் அபாரம்.

‘வசனங்கள் மிக இயல்பாக எழுதப்பட்டுள்ளன’ என்று பாராட்டலாம். அதே நேரத்தில் ‘அவசரத்துல எழுதியிருப்பாங்க போலிருக்கு. அதான் ஒரு தனித்துவம் இல்லாம போச்சு’ என்றும் குறை சொல்லலாம். “நாங்க கோட்டு சூட்டு போட்டா உங்களுக்கு அது ஏண்டா உறுத்தலா இருக்கு?” என்கிற வரிகளில் மட்டும், பெட்ரோல் வாசனை! மற்ற எந்த இடங்களிலும் அது போன்ற நெருப்பு வாசனை இல்லாதது பெரும் குறை.

ரஜினியின் வழக்கமான படமாக இது இருந்துவிடக் கூடாது என்பதில் பெரும் முனைப்பு காட்டியிருக்கிறார் பா.ரஞ்சித். அவரது அறிமுக காட்சியில் ஒரு கொண்டாட்ட பாடல் இல்லை. ஹாஸ்யங்களுக்கு வழி இருந்தும், அந்த கதவுகளையெல்லாம் மெனக்கெட்டு அடைத்திருக்கிறார் டைரக்டர். இந்த ரஜினி படம், பலத்த பாடுபட்டு  ரஞ்சித் படமாக்கப்பட்டுள்ளது என்பதற்கு சில உதாரணங்கள் இவை.

ரஜினி என்ற ஸ்டார் ஓட்டலையே சொத்தாக எழுதி வைத்துவிட்டார் தயாரிப்பாளர் தாணு. அப்படியிருந்தும், பசிக்கு கையேந்தி பவன் பக்கம் ஒதுங்கியிருக்கிறார் பா.ரஞ்சித்.

ஃபேட் என்பதா, டேஸ்ட் என்பதா?


- ஆர்.எஸ்.அந்தணன்

comments powered by Disqus