Wednesday, Oct 05th

Last updateFri, 29 Jul 2016 3pm

எல்லைகள் கடந்த விவரணத் திரை விழா VISIONS DU REEL

மனித வாழ்வியலின் கூறுகளைக் கொண்டே பல்வேறு சினிமாக்கள் உருவாகின்றன. மனித வாழ்வியலுக்கு அப்பாலான விடயங்கள் காட்சியூடகமாகப் பதிவாகும்போது, அவை விவரணங்களாகின்றன.

விவரணங்களில் மனித வாழ்வியல் பதிவு செய்யப்படுவதும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பின்னொரு பொழுதில் அவ்வாறான பதிவுகள்,  வரலாற்றின் சாட்சி ஆவணங்களாவதும் உண்டு.  உலகின் பல பாகங்களிலும், பலமொழிகளிலும், இச் செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவ்வாறான முயற்சிகள் தமிழில் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. ஆவணப்பட உருவாக்கத்திலுள்ள சவால்களும், அதற்கான மட்டுப்படுத்தப்பட்ட பொருளாதார வாய்ப்புக்களுமே.இதற்கான காரணங்கள். இதே காரணங்களை உலகின் பல பாகங்களிலும் உள்ள ஆவணப் படக் கலைஞர்களும் சந்தித்தே வருகின்றார்கள். அவ்வாறான கலைஞர்களையும், படைப்பாளிகளையும், ஆர்வலர்களையும், ஒன்றிணைக்கும் ஒரு பெருமுயற்சிதான் சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும், VISIONS DU REEL விசியோன்ஸ் து றீல் சர்வதேசத் திரைப்பட விழா.

46 வருடகாலத் தொடர்ச்சியினைக் கொண்டிருக்கும் இந்தப் பெருவிழாவோடு, உலகெங்கும் பரந்து வாழும் தமிழ்மக்களை, படைப்பாளிககைளை, ஒன்றிணைக்கும் நோக்கில், உத்தியோகபூர்வ ஊடகவியலாளர்களாக, உங்கள் 4தமிழ்மீடியாவும் இவ்வருடம் இணைந்துள்ளதை மகிழ்ச்சியோடு அறியத்தருகின்றோம்.


சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில், இவ்வருடம் ஏப்ரல் 17ந் திகதி ஆரம்பமாகியுள்ள 46 வது விசியோன்ஸ் து றீல் சர்வ தேசத் திரைப்பட விழா ஏப்ரல் 25 வரை நடைபெறுகிறது. கடந்த வருடம் நடைபெற்ற இத் திரைப்பட விழாவில் 33,000 பார்வையாளர்கள் கலந்து கொண்டிருந்ததாகப் புள்ளி விபரங்களில் தெரிவிக்கின்றார்கள். இது இவ்வருடம் மேலும் அதிகரிக்கும் எனும் நம்பிக்கை கொண்டிருக்கின்றார்கள் ஏற்பாட்டாளர்கள். இவ்வருட விழாவின் இரண்டாம் நாளாகிய ஏப்ரல் 18ந் திகதி மட்டும், இவ்விழாவில் 4000 க்கும் அதிகமான பார்வையாளர்கள் கலந்து கொண்டிருந்ததாகவும் தெரியவருகிறது.

சுவிற்சர்லாந்தின் தென்மேற்குத் திசையில், Lac Léman ஏரிக்கரையில் அழகும், அமைதியும், புராதனமும், கொண்டமைந்திருக்கும்  நகரம் நியோன். மலைச்சாரல்களில் நிறைந்திருக்கும் திராட்சைகளின் சாறெடுத்து உலகத் தரம் வாய்ந்த  "வைன்"  உற்பத்தி செய்யும் பிரதேசம். பிரெஞ்மொழி பேசும் மக்கள் நிறைந்து வாழும் நிலம்.  "VISIONS DU REEL "விசியோன்ஸ் து றீல் எனும் பிரெஞ்சு மொழியிலான வாசகத்துக்குத்   'உண்மையின் தரிசனம்'  எனத் தமிழில் பொருள் கொள்ளலாம். இவ்வாறான பெயருடன் நிகழும் இச் சர்வதேச திரைப்படவிழாவில் காட்சிப்படுத்தப்படும் விவரணங்களும், உண்மையான காட்சியின் பதிவுகளாக அமைவது, இத் திரைப்படவிழாவின் நோக்கத்தை நிறைவேற்றுகிறது எனலாம்.

இவ் விழாவில் நாம் பங்கேற்ற முதல் நாளில் பார்க்க முடிந்த  Regard Neuf நெறியாள்கையிலான  "16 Years Till Summer " மற்றும், Nicolas Wadimoff நெறியாள்கையிலான "Spartiates " ஆகிய இரு விவரணங்கள்.  "16 Years Till Summer " ஒரு ஆயுள் தண்டனைக் கைதியினைக் குறித்த பதிவுகள். "Spartiates " பிரெஞ்சு தேசத்துக்குப் புலம் பெயர்ந்த இரண்டாம், மூன்றாம் தலைமுறையினர், தற்காப்புக் கலை கற்றுக் கொள்கையில் சந்திக்கும் விடயங்கள் தொடர்பான பதிவுகள். ( இந்த இரு படங்களுடன், இத் திரைப்பட விழாவில் காட்சிப்படுத்தப்பட்ட மேலும் சில படங்களின் விரிவான பார்வைகளைப் பின்னர் தருகின்றோம்.)  இந்த இரு விவரணங்களும், உண்மையின் பதிவுகளாவே இருந்ததைக் காண்கையில், இத் திரைப்பட விழாவின் தெரிவுகளது தரம் அறிய முடிந்தது.

Claude Ruey, Président de Visions du Réel


Luciano Barisone, Directeur de Visions du Réel

விவரணத் திரைப்படக் காட்சிப்படுத்தல்கள் என்பதற்கும் அப்பால், அவ் விவரணங்கள் குறித்த உரையாடல்கள், அவற்றுக்கான தொடர்பாடல்கள், சந்தைப்படுத்தல்கள் என்பவை குறித்தும், இவ் விழா ஏற்பாட்டாளர்கள் தமது கவனத்தினைக் கொண்டிருப்பதைக் காணமுடிந்தது. அந்த வகையில் ஆவணப்படத் தயாரிப்புக்களின் பின்னாலுள்ள சவால்கள், அவற்றுக்கான தீர்வுகள் என்பனவற்றை ஆராயும் திறந்த களமாகவும் இத் திரைப்பட விழா அமைகிறது. அதுவே அங்கு வரும் படைப்பாளிகள், பார்வையாளர்களை, தேடல் மிகுந்தவர்களாகவும் மாற்றியமைக்கிறது. இந்த மாற்றத்திற்காகச் செயலாற்றும் இத் திரைப்பட விழாக் குழுவின் மதிப்பிற்குரிய தலைவர் Claude Ruey, இயக்குனர் Luciano Barisone, மற்றும் குழுவினர்களது பெரு முயற்சியால், எல்லைகள் கடந்து எல்லோரையும் ஒன்றினைக்கும் புள்ளியில் விசியோன்ஸ் து றீல் வெற்றிகரமாகத் தன்னை நிலை நிறுத்துகிறது. ஆவணப்படங்களின் அருமை தெரிந்தவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய, பங்குகொள்ள வேண்டிய சர்வதேசத் திரைப்பட விழா விசியோன்ஸ் து றீல் VISIONS DU REEL - Festival international de cinema.

இணையத்தளம் : http://www.visionsdureel.ch

- 4தமிழ்மீடியாவிற்காக : மலைநாடான்


comments powered by Disqus