Wednesday, Oct 05th

Last updateFri, 29 Jul 2016 3pm

புங்குடுதீவு: சிதைவுறும் நிலம்!

சமூகமொன்றின் நிலைத்திருத்தலுக்கான ஒழுங்கு அக-புறக் காரணிகளினால் மாற்றமடையும் போது, அந்தச் சமூகம் வேர்விட்டிருந்த நிலத்தின் சிதைவு ஆரம்பிக்கின்றது. வடக்கு- கிழக்கில் தமிழ் மக்களின் வேர்கள் அறுந்த/ அறுக்கப்பட்ட நிலங்கள் ஏராளம் உண்டு. அல்லது அந்த நிலங்களின் இயல்பு வலிந்து மாற்றப்பட்டு புதிய ஒழுங்கொன்றுக்குள் தள்ளப்படும் தொடர் காட்சிகளும் உண்டு. 

அப்படிப்பட்ட நிலமொன்றினை ஆவணப்படுத்தியிருக்கின்றது தங்கேஸ் பரம்சோதியின் ‘புங்குடுதீவு: சிதைவுறும் நிலம்’ என்கிற படம். கலாநிதிப் பட்டத்துக்கான ஆய்வு மாணவரான தங்கேஸ், புங்குடுதீவினை (நிலத்தினை) தன்னுடைய விடயப்பரப்பாக முன்வைக்கும் போது பல்வேறான கேள்விகள் மேலோட்டமாக எழுந்திருக்கலாம். குறிப்பாக, புங்குடுதீவின் பூர்வீகக் குடிகளில் 90 வீதமானவர்கள் இடம்பெயர்ந்துவிட்ட பின் அந்த நிலத்தினை ஆய்வு செய்வதனால் என்ன பயன் கிடைத்துவிடும்?, அப்படியிருக்க அதற்காக செலவிடப்படும் நேரமும், உழைப்பும் உண்மையில் நன்மை பயக்குமா? என்றவாறாக அவை இருந்திருக்கலாம். ஆனால், அவற்றை மறுதலித்து பாரிய உண்மைகளை பிரதிபலித்திருக்கிறது ஆவணப்படம்.

தமிழ் மக்களின் வாழ்வியல் ஆயுதப் போராட்டத்துக்கு முன்னும் பின்னும் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்திருக்கின்றது. அவை, பல்வேறு ஒழுங்குகளை மாற்றியிருக்கின்றது. இன்னும் சிலவற்றை எந்தவித விட்டுக் கொடுப்புமின்றி தக்கவைத்துக் கொண்டுமிருக்கின்றது.

குறிப்பாக, தமிழ் சமூக ஒழுங்கில் தாக்கம் செலுத்தும் தொழில், பொருளாதாரம், கல்வி, சாதியம், வர்க்க முரண்பாடுகள் உள்ளிட்ட விடயங்கள் முக்கியமானவை. அந்த விடயங்களுக்குள் இடப்பெயர்வு ஏற்படுத்திவிட்டிருக்கின்ற விளைவுகளையும், விளைவுகளின் விளைவினையும் புங்குடுதீவு தற்போது தாங்கி நின்கின்றது. இது, தமிழ் மக்களின் ஒட்டுமொத்த ஒழுங்கின்- நிலத்தின் நீட்சியாக பதிவாகின்றது.

போருக்குப் பின்னரான தமிழ்ச் சூழலில் திட்டமிடல்கள் இன்றி கையாளப்படும் பெருமளவான நிதியின் பயன்பாடு எப்படிப்பட்டது, அது சாத்தியமான வழிகளைத் திறக்கின்றதா என்பதையும் ஆவணப்படம் பதிவு செய்திருக்கின்றது. குறிப்பாக, மக்களே இல்லாத நிலத்தில் கோடிகளைக் கொட்டி கட்டப்படும் கோயில்களினூடு வரட்டுக் கௌவரம் மாத்திரம் காப்பாற்றப்படுவதும், அதற்கு மேல் அதனால் பலன்கள் இன்றி நிலம் சிதைவடைவதும் ஆவணமாகியிருக்கின்றது.

கோடிகளைக் கொட்டி கோயில்களைக் கட்டும் தரப்பு, அந்தக் கோயிலைச் சுற்றியுள்ள பகுதியின் பராமரிப்பு, வீதி அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும் என்கிற விடயம் முக்கியமாக கவனிக்கத்தக்கது. இது, தமிழ் சூழலில் திட்டமிடல்கள் ஏதுமின்றி முதலிடப்படும் பெரும் நிதியின் வீண்விரயத்தின் சாட்சிகளாகும். அதனையும் ஆவணப்படம் சுட்டி நிற்கின்றது.

நிலமொன்றின் ஆரோக்கியமான நீட்சி, பராமரித்தல், பாதுகாத்தலினூடு சாத்தியப்படுத்தப்பட வேண்டியது. அது, இல்லாமற்போகும் சந்தர்ப்பங்களில் நிலத்தின் இறப்புக் காலம் ஆரம்பிக்கின்றது. இங்கு நிலம் என்பது நிலம் மாத்திரமல்ல. அது, கிராமத்தின் இழப்பு, நாட்டின் சிதைவு, மக்களின் வீழ்ச்சி, இனத்தின் தோல்வி என்பனவாகும். அந்த விடயங்களை மக்களின் கருத்துக்களினூடு ‘புங்குடுதீவு: சிதைவுறும் நிலம்’ ஆவணப்படுத்தியிருக்கின்றது.

புங்குடுதீவுவினை ஆய்வுப் பரப்பாக மாத்திரம் கொள்ளாமல், தமிழ் மக்கள் எதிர்கொண்டிருக்கின்ற சிக்கல்களை புரிய வைப்பதற்கான தீர்க்கமான முனைப்பினை தங்கேஸ் பரம்சோதி படத்தினூடு செய்திருக்கின்றார். ஆவணப்படமொன்று கொடுக்கும் அலுப்பினை அகற்றி சிறந்த திரை வடிவத்தினை புகுத்தியதில் ஞானதாஸ் காசிநாதர் பெரும் பங்காற்றியிருக்கின்றார். அதுபோல, ஆவணப்படமொன்றை பார்க்கின்றோம் என்கிற விடயங்களை புறந்தள்ளிய விதத்தில் சுரேந்திரகுமாரின் ஒளிப்பதிவும், மதீசன் தனபாலசிங்கத்தின் பின்னணி இசையும், படத் தொகுப்பாளரின் பங்கும் அளப்பரியது.

‘புங்குடுதீவு: சிதைவுறும் நிலம்’ ஆவணப்படக்குழுவுக்கு வாழ்த்துக்கள். படம் பார்வையாளர்களுக்கு நிறைவான புரிதல்களை ஏற்படுத்துகின்றது. ஆக, எமது நிலத்தின் சிதைவினைத் தடுக்க நினைப்பவர்கள் இந்தப் படத்தினையும் ஒருமுறை பார்த்துவிடுங்கள். மனப்பூர்வமாக பரிந்துரைக்கின்றேன்!

- 4தமிழ்மீடியாவிற்காக: புருஜோத்தமன் தங்கமயில்

comments powered by Disqus