Saturday, Sep 25th

Last updateFri, 29 Jul 2016 3pm

தமிழ் ஊடகப் பரப்பும், அகற்றப்பட வேண்டியவையும்! (புருஜோத்தமன் தங்கமயில்)

முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர், இதோ போன்றதொரு காலையில் (ஜூன் 01) அரிய தொகுப்புக்கள், வரலாற்றுச் சுவடிகள் உள்ளடங்கலாக சுமார் 97,000 புத்தகங்களுடன், யாழ். பொது நூலகம் எரிந்து அடங்கியது. எரித்தவர்கள், இறுமாப்போடு கடந்து போனார்கள். எரிந்துபோன புத்தகங்களின் எச்சங்களைக் கட்டிக்கொண்டு அழுதவர்களின் மனவடு, எந்தவித ஆற்றுதலும் இன்றி, எரிந்து எழுந்த சுவாலைக்குள்ளும், அதன் வெம்மைக்குள்ளும் இன்னமும் தகித்துக் கொண்டிருக்கின்றது. 

யாழ். பொது நூலக எரிப்பு, தமிழர்களின் கல்வி, அரசியல் மற்றும் சமூக உரையாடல் வெளிக்கான அச்சுறுத்தலின் பிரதிபலிப்பு. தமிழ் மக்கள், தமது அரசியலுரிமைப் போராட்டங்களை ஆரம்பித்த காலம் முதல், கருத்தியல் மற்றும் புலமைச் சொத்துக்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல்களை எதிர்கொண்டு வந்திருக்கின்றனர். சில தருணங்களில் அப்படியான தாக்குதல்கள் நம்பிக்கைகளின் ஆணி வேரினை ஆட்டம் காணச் செய்திருந்தாலும், அதிக தருணங்களில் ஓர்மத்தையும், ஒருங்கிணைவையும் அதிகப்படுத்தியே வந்திருக்கின்றன.

யாழ். பொது நூலக எரிப்பு போன்ற பொது எதிரிகளின் கருத்தியல், புலமை மற்றும் அரசியல் அச்சுறுத்தல்களுக்கு எதிராக தொடர்ந்தும் கிளர்ந்து எழுந்து வருகின்ற தமிழ்த் தேசியப் பரப்பு, கருத்துச் சுதந்திரம் பற்றிய தன்னுடைய அகவெளியை ஏன் பூரணமாக வைத்துக் கொண்டிருப்பதில் அவ்வளவு அக்கறை கொள்ளவில்லை என்கிற கேள்வி எழுகின்றது. கடந்த வாரம், வடக்கு மாகாண சபை அமர்வுகளின் போது, யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிகையொன்றுக்கு எதிராக 'மஞ்சள் பத்திரிகை' என்கிற அடையாளப்படுத்தல்களுடன் பெரும் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

ஊடக தர்மம், ஒழுக்கம் பற்றிய கேள்விகளை பெரும் குரலெடுத்து எழுப்பிய மாகாண சபை உறுப்பினர்கள், ஊடகவியலாளர்களுக்கு இருக்கின்ற கருத்தியல் ரீதியான சுதந்திரம் பற்றிய எந்தவித அக்கறையையும் வெளிப்படுத்தவில்லை. ஒருவகையில், ஏக மனநிலையோடு அவர்கள் நடந்து கொண்டனர். அதில், அடக்கியாளும் அதிகாரத் தோரணை வெளிப்பட்டது. இந்தச் சம்பவத்துக்கு எதிராக, யாழ். ஊடக அமையம் கண்டன அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதன் சாராம்சம், 'தமிழ்த் தேசியத்தின் பெயரால் அரசியல் செய்வோர், ஊடகங்களை அடக்க நினைக்கின்றனர்' என்பது மாதிரியாக இருந்தது.

தமிழ்த் தேசிய அரசியலின் அஹிம்சை போராட்டக்களமும், அதன் பின்னர் ஆயுதப் போராட்டக்களமும் ஊடகங்களின் பெரும் பங்களிப்போடுதான் எழுந்து வந்தது. இன்றைக்கும் அதுதான் நிலை. தமிழ்த் தேசியப் போராட்டம் ஆரம்பித்தது முதல், அதற்காக அர்ப்பணித்து உயிரை விட்ட ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை பெரியது. (இன்னொரு பக்கத்தில், தரகு வேலைகள் பார்த்து தங்களது வயிறுகளை வளர்த்தவர்களும், வளர்ப்பவர்களும் ஊடகவியலாளர்கள் என்கிற போர்வையில் உலவும் தளமாக, தமிழ் ஊடகப் பரப்பு இன்னமும் நீள்கின்றது. அதுவும் சுட்டிக்காட்டப்பட வேண்டியதுதான்.) இன்றைக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களோடுதான் ஊடகப் பணியை தமிழ் ஊடகவியலாளர்கள் ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் குறிப்பிட்டளவு நம்பகத் தன்மை நீள்வதற்கு அவர்களின் பங்களிப்பு தவிர்க்க முடியாதது.

ஆனால், தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், குறிப்பாக, வாக்கு அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்களை தருணங்களுக்கு ஏற்ற வகையில் நண்பர்களாகவும் எதிரிகளாகவும் கொள்கின்றனர். தங்களுக்கு தேவையான தருணத்தில் அவ்வளவு அன்போடு செயற்படும் அவர்கள், தங்கள் மீதான விமர்சனங்களைக் கண்டு பெரும் கொதிப்படைகின்றனர். கருத்தியல் ரீதியான அரங்கினை எதிர்கொள்வது தொடர்பிலான மனத்தடையே இதற்கு காரணம். இது, இன்றைக்கு நேற்றுத் தோன்றியது அல்ல. தமிழ்த் தேசியப் போராட்டங்கள் வளர்ந்த காலந்தொட்டே இருப்பதுதான்.

அதாவது, கருத்தியல் சகிப்புத்தன்மையற்று ‘கொலைகள்’ வரையில் நிகழ்த்தும் பக்கங்களை தமிழ்ச் சூழலும் திறந்து விட்டிருந்தது. அந்தக் கொலைகளை, காரணங்கள் சொல்லி நியாயப்படுத்தும் வேலைகளை, தமிழ்த் தேசிய அரசியலும் ஊடகப் பரப்பின் ஒரு பக்கமும் கூட தொடர்ச்சியாகச் செய்து வந்திருக்கிறது. எங்களுக்கிடையிலான உரையாடல் வெளியை நாம் ஏன் மறுதலித்தோம் என்பது தொடர்பிலும், நாம் மீளாய்வு செய்ய வேண்டிய தருணம் இது. இதில், தமிழ் அரசியல் மற்றும் ஊடக தளத்தின் பங்கும் முக்கியமானது. அத்தோடு, மக்களின் தொடர்ச்சியான கேள்விகள் அதிமுக்கியமானவை.

கருத்தியலுக்கு எதிரான கொலைகளை தமிழ்ச் சூழல் சகிக்கப் பழகியதன் விளைவு, கருத்தியல் சகிப்புத்தன்மையற்ற அரசியல் தோற்றம் பெற்றது. அதன் நீட்சி இன்னமும் சீழ் வடியும் ஆறாக்காயமாக இருக்கிறது. ஊடகவியலாளர்கள், கருத்தியலாளர்கள் மீதான கொலைகள் இன்றைக்கு சற்றுக் குறைந்துவிட்டாலும் அவர்கள் மீதான அடக்குமுறையின் வடிவங்கள் அவ்வளவுக்கு குறையவில்லை. அதிகாரத்திலுள்ள அரசியல்வாதிகள் மற்றும் அமைப்புக்களின் அழுத்தங்களினால், ஊடக நிறுவனங்கள் சில இன்றைக்கும் ஊடகவியலாளர்களை பூரண சுதந்திரத்துடன் இயங்க அனுமதிப்பதில்லை. விமர்சனங்களை அனுமதிப்பதில்லை. பல அரசியல் எழுத்தாளர்கள் இவ்வாறான அழுத்தங்களினால் தங்களது பணிகளை நிறுத்திக் கொண்ட வரலாறுகள் உண்டு. ஊடகவியலாளர்கள் தூக்கியெறியப்பட்ட காட்சிகளும் அவ்வப்போது அரங்கேறுகின்றது.

தமிழ்த் தேசிய அரசியல் பரப்பும் செயற்பாட்டுத்தளமும், ஆதரவு- எதிர் மனநிலையின் பக்கங்களின் போக்கிலேயே அனைத்து விடயங்களையும் அணுகி வருகின்றது. அதனைத் தாண்டி விடயங்களை நியாயங்களின் போக்கில் ஆராய்வது தொடர்பில் அக்கறை கொள்வதில்லை. அப்படியான முனைப்புக்களை அங்கிகரிப்பதும் இல்லை. அது, ஊடகப் பரப்புக்குள்ளும் ஆளுமை செலுத்த ஆரம்பித்துவிட்டது. அது, குணப்படுத்த முடியாத புற்று மாதிரியாகிவிட்டது.

இன்றைக்கு தமிழ் ஊடகப் பரப்பின் வெளி, தாயகம்- புலம்பெயர் தேசம் என்று இரண்டு தளங்களை நோக்கி பிரதானப்படுத்தப்பட்டிருக்கின்றது. இரண்டின் அடிப்படையும் தாயகத்திலிருந்து கட்டமைக்கப்படுவதுதான். ஆனால், ஒரு செய்தியின் வடிவம், இரண்டு தளங்களுக்கும் ஏற்ப பல விதமாக மாற்றங்களைச் செய்து கொள்கிறது. அல்லது, அந்தச் செய்தியின் உள்ளடக்கம் சார்ந்து எதனைப் பிரதானப்படுத்துவது என்பது தொடர்பில் குறிப்பிட்டளவான இடைவெளியொன்றை வைத்துக் கொண்டிருக்கிறது. அதைத் தாண்டி, இணைய ஊடகங்களில் வரவு என்பது நம்பகத்தன்மையின் பக்கத்தை அடிபட வைத்துவிட்டிருக்கின்றன என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

இணையமும் அதுசார்ந்த ஊடக வளர்ச்சியும் அபரிமிதமானது. அதன் வேகம் எதிர்பார்ப்புக்களைத் தாண்டியது. ஆனால், அந்த வேகத்தோடு நம்பகத்தன்மையற்ற தன்மையும் வளர்ந்து வருவதுதான் வருந்தத்தக்க ஒன்றாக இருக்கிறது. எந்தவித பொறுப்புணர்வும் பொறுப்புக்கூறலுக்குமான கடப்பாடுமின்றி, தமிழ் சூழலில் இணைய ஊடகங்கள் ஆயிரக்கணக்கில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த ஊடகங்கள் ஏற்படுத்தும் எதிர்விளைவுகள், மிகப்பெரிய அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்தி விட்டிருக்கின்றன. இவை, பொது எதிரிகளின் நிகழ்ச்சி நிரலின் போக்கில் பல நேரங்களில் ஒத்திசைந்து கொள்கின்றன. அத்தோடு, தமிழ்த் தேசியப் பரப்பின் கருத்தியல் வெளியின் சுதந்திரம் பற்றிய எதிர்பார்ப்புக்களை தகர்ப்பதில், குறிக்கோளோடு செயற்படுகின்றன. இவற்றுக்குப் பின்னால் குறுகிய நோக்கங்கள் வீச்சம் பெற்றிருக்கின்றன.

இவ்வாறான ஊடகங்கள், கவர்ச்சியூட்டும் விடயங்கள் என்று, இரண்டாம் தர வேலைகளைச் செய்து கொண்டிருப்பதையும் தமிழ் ஊடகப் பரப்பு எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது. இது, தமிழ் ஊடகப் பரப்பின் நியாயமான வளர்ச்சிக்கும் சுதந்திரத்துக்கும் அச்சுறுத்தலானது. இப்படிப்பட்டவர்களை இனங்கண்டு கொள்வதும் நிராகரிப்பதும் அவசியமானது. இந்த இடத்தில் தான் சில வேளைகளில் ஒழுங்குபடுத்தல்களின் மீது நம்பிக்கை கொள்ள வேண்டியிருக்கிறது.

இணையத்தில் கோலொச்சும் இரண்டாம் தர ஊடகங்களினை முன்னூதாரணமாகக் கொண்டு, தமிழ் ஊடகப் பரப்பில் கோலொச்சி வரும் பிரதான அச்சு - இலத்திரனியல் ஊடகங்களும் தம் வழியை மாற்றிக் கொண்ட காட்சிகளை நாம் அண்மைக்காலமாகக் காண வேண்டியிருக்கிறது. அது, எந்தவித தார்மிகமும் ஒழுக்கமும் இன்றிய ஊடகநெறியை தோற்றுவிக்கின்றன. அப்படியான நிலையில், அதனை புறந்தள்ளுவதற்கான சூழலை ஏற்படுத்துவது தொடர்பிலும் தமிழ் ஊடகப் பரப்பு நியாயமான உரையாடல்களை நிகழ்த்த வேண்டும்.

ஊடக - கருத்தியல் சுதந்திரம் பற்றிய உரையாடல்கள் என்றைக்குமே நிறைவு பெற முடியாதவை. ஆனால், தமிழ்த் தேசிய அரசியற்பரப்பின் அடிப்படைக் கட்டுமானங்களை மீளவும் சரிசெய்து கொள்ள வேண்டிய கடப்பாடொன்று ஏற்பட்டிருக்கின்ற நிலையில், அதன் ஒரு கட்டமாக, ஊடகப் பரப்பின் கறைப் பக்கங்களை அல்லது அழுக்குப் படிந்த பக்கங்களை கழுவிச் சுத்தப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஏனெனில், ஊடக வெளியின் உண்மையான சுதந்திரம் பற்றிய உணர்வினை மக்களிடம் நியாயமாக கொண்டு சேர்ந்தல் என்பது ஏற்கெனவே இருக்கின்ற தவறான புரிதல்களை கழைவதோடு ஆரம்பிக்க வேண்டும். அதுதான், ஊடகங்கள் மற்றும் ஊடக சுதந்திரத்தின் மீதான அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு நியாயமான பக்கத்தில் நகர்வதற்கான தெம்பினை வழங்கும். இல்லையொன்றால், ஊடகப் பரப்பின் மீதான அச்சுறுத்தல்களையும் அழுத்தங்களையும் மக்களும் சகிக்கப்பழகிவிடுவார்கள். அது, ஊடக அடக்குமுறையாளர்களுக்கு சாதகமானது. அது, சமூக வளர்ச்சியைப் புறந்தள்ளும் சாபக்கேடாகத் தொடரும்.

(தமிழ்மிரர் பத்திரிகையில் (ஜூன் 01, 2016) வெளியான இந்தக் கட்டுரையை நன்றி அறிவித்தலோடு மீளப்பதிகின்றோம்: ஆசிரியர் குழு, 4TamilMedia)

comments powered by Disqus